திருச்செந்தூரில் 1½ வயது குழந்தை கடத்தலில் மேலும் ஒருவருக்கு தொடர்பு


திருச்செந்தூரில் 1½ வயது குழந்தை கடத்தலில் மேலும் ஒருவருக்கு தொடர்பு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 1½ வயது குழந்தை கடத்தலில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவர் தனது மனைவி ரதி மற்றும் 1½ வயது மகன் ஸ்ரீஹரிசுடன் கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு அவர்கள் மாலை அணிந்து, தங்கி விரதம் இருந்து வந்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவர்களிடம் நன்றாக பேசி பழகி ஒன்றாக தங்கி இருந்தார்.

கடந்த 5-ந்தேதி முத்துராஜ் தனது மனைவி, குழந்தையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர்களுடன் அந்த பெண்ணும் வந்திருந்தார். அந்த நேரத்தில் அந்த பெண் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வருவதாக கூறி தூக்கி சென்றார். பின்னர் மீண்டும் அவர் திரும்பி வராததால் குழந்தையை கடத்தி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குழந்தையின் தாயார் ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தையுடன் அந்த பெண் ஹெல்மெட் அணிந்த ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தூத்துக்குடி-மதுரை ரோட்டில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி வரை மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் குழந்தை கடத்தலில் அந்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story