பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி
தாய் கண் எதிரே 1½ வயது பெண் குழந்தை பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.
சேலம்,
சேலம் மாவட்டம் லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 37), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுதா (30). இவர்களுக்கு வேதா ஸ்ரீ என்ற 4 வயது மகளும், பவனிகா ஸ்ரீ என்ற 1½ வயது குழந்தையும் இருந்தனர்.
இவர்களில் வேதா ஸ்ரீ வீரகனூரில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். வழக்கமாக தனது மூத்த மகளை சுதா பள்ளிக்கு பஸ் ஏற்றி அனுப்புவதற்கு குழந்தை பவனிகா ஸ்ரீயையும் உடன் அழைத்து செல்வாராம். அதேபோல நேற்று காலையில் வேதா ஸ்ரீயை பள்ளிக்கு அனுப்ப தனது இளைய மகளான குழந்தை பவனிகா ஸ்ரீயுடன் வீட்டின் அருகே உள்ள நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
அப்போது அங்கு தனியார் பள்ளி பஸ் வந்து நின்றது. உடனே தனது மூத்த மகள் வேதா ஸ்ரீயை பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் சுதா ஏற்றி விட்டு கொண்டிருந்தார். அதே நேரத்தில் தாயின் அருகில் நின்ற குழந்தை பவனிகா ஸ்ரீ எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன் சக்கரத்தின் அருகே சென்றுள்ளது.
வேதா ஸ்ரீயை பஸ் ஏற்றி விட்டவுடன், பஸ்சை டிரைவர் அங்கிருந்து ஓட்டி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க சக்கரம் குழந்தை பவனிகா ஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை உடல் நசுங்கி தாய் கண் முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தது.