பெண்களிடம் 10½ பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில் பெண்களிடம் 10½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள், .
தஞ்சையில் பெண்களிடம் 10½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள், .
கீழே தள்ளி சங்கிலி பறிப்பு
தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் உள்ள வள்ளலார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சரோஜா (வயது73). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றார். கிருஷ்ணாபுரத்தில் உள்ள திருவள்ளுவர் தெருவில் நடந்து வந்த போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர், சரோஜாவை கீழே தள்ளி விட்டு, அவர் கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இது குறித்து சரோஜா தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பஸ்சில் கைவரிசை
தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மனைவி யசோதை (65). சம்பவத்தன்று இவர் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பஸ்சில் சென்றார்.
மாரியம்மன்கோவில் அருகே பஸ்சில் இருந்து இறங்கி கழுத்தை பார்த்த போது தான் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை காணவில்லை. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இது குறித்து யசோதை தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.