பா.ஜனதாவினர் 10 பேர் சிறையில் அடைப்பு


பா.ஜனதாவினர் 10 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை பீளமேடு புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதை அறிந்த பா.ஜனதா தொண்டர்கள் பீளமேடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலாஜி உத்தம ராமசாமியை விடுதலை செய்யக்கோரி கோவை-அவினாசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசார் பாதுகாப்புகாக வைத்திருந்த தடுப்புகளை சேதப்படுத்தினர். மேலும் மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த தி.மு.க போஸ்டரை கிழித்து ஆ.ராசாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாவட்ட பா.ஜனதா துணை செயலாளர் குமரன் (வயது 41), ரமேஷ் (30), விவேக் (35), முருகேசன் (56), நாச்சி முத்து (34), ஜெய்கணேசன் (49), தம்புராஜ் (51), ராஜரத்தினம் (53), ஜெகதீசன் (43), ஜீவா (27) ஆகிய 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலும் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story