கோவை மாநகராட்சியில் ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ரிசர்வ் சைட் நிலத்தை நேற்று அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ரிசர்வ் சைட் நிலத்தை நேற்று அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
ஆக்கிரமிப்பு நிலம்
கோவை மாநகராட்சியில் வீட்டுமனைகள் பிரிக்கப்படும்போது அதில் மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு நிலம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும் நிலம் ரிசர்வ் சைட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் வீட்டுமனை பிரிக்கப்பட்ட போது பூங்கா அமைக்க 36 சென்ட் நிலம் உள்பட 39 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ரிசர்வ் சைட் அப்போதைய உள்ளாட்சி அமைப்பான விளாங்குறிச்சி ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதன்பின்னர் இந்த பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பு
இந்த நிலையில் ஒருவர் ரிசர்வ் சைட் இடத்தை ஆக்கிரமித்து 2 சென்ட் இடத்தில் வீடு கட்டினார். இதுகுறித்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பபை அகற்றி நிலத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கடந்த வாரம் ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றப்பட்டது. மேலும் 39 இடத்தை மீட்டு இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு ரூ.10 கோடி என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.