நாமக்கல் நகராட்சியில் ரூ.10½ கோடி வரிபாக்கி


நாமக்கல் நகராட்சியில் ரூ.10½ கோடி வரிபாக்கி
x

நாமக்கல் நகராட்சியில் ரூ.10½ கோடி வரி பாக்கி உள்ளது. எனவே காலிமனை வரி, தொழில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நாமக்கல்

ரூ.10½ கோடி வரி பாக்கி

நாமக்கல் நகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மூலம் நகராட்சிக்கு வரவேண்டிய வரிவசூல் ரூ.10 கோடியே 60 லட்சம் நிலுவையில் உள்ளது. இந்த வரி பாக்கியை பொதுமக்கள் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்த காலஅவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவகாசம் முடிந்த பிறகும் பொதுமக்கள் செலுத்த முன்வரவில்லை.

தற்போது வசூல் செய்யும் பணி நகராட்சியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்களுடன் இணைந்து நகராட்சியில் பிறதுறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் வீடு, வீடாக சென்று வரி வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற மார்ச் மாதம் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்ய நகராட்சி அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சொத்துவரி

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் நகராட்சியில் 55 ஆயிரத்து 203 சொத்துவரி விதிப்புகள் உள்ளன. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிகடைகள், நகைகடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அதன் உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்த வேண்டும். ரூ.13.70 கோடி மொத்தம் தொழில்வரியாக வசூலாக வேண்டும். ஆனால் இதுவரை ரூ.9 கோடி மட்டும் வசூலாகியுள்ளது.

நாமக்கல் நகராட்சி பகுதியில் 7,058 காலிமனை வரி விதிப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக ரூ.2.45 கோடி காலிமனை வரி நிலுவையில் உள்ளது. இந்த வரியை விரைவாக செலுத்தாதவர்களின் காலிமனைகள் பிற்காலத்தில் விற்பனை செய்ய முடியாத அளவுக்கு பத்திரபதிவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சட்டபூர்வ நடவடிக்கை

இதேபோல நாமக்கல் நகராட்சி பகுதியில் தொழில்வரி செலுத்தி தொழில் செய்பவர்கள் 6,751 பேர் உள்ளனர். இவர்கள் மூலம் நகராட்சிக்கு ரூ.2 கோடி வரி வசூல் நிலுவையில் உள்ளது. அவர்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்ய வணிகவரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் நகராட்சி பகுதியில் மொத்தம் 23 ஆயிரத்து 593 குடிநீர் இணைப்புகள் மற்றும் 9,977 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் ரூ.3 கோடியே 20 லட்சம் நிலுவையில் உள்ளது. மொத்தமாக நாமக்கல் நகராட்சிக்கு ரூ.10 கோடியே 60 லட்சம் வரை வரி பாக்கி உள்ளது. இவற்றை பொதுமக்கள் விரைவாக செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story