10 கி.மீ. தூரம் அகழி தோண்டும் பணி
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க செளுக்காடி முதல் இரும்பு பாலம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் அகழி தோண்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க செளுக்காடி முதல் இரும்பு பாலம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் அகழி தோண்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
ஊருக்குள் வரும் யானைகள்
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செளுக்காடி பகுதியில் உள்ள கோல்கேட் உள்பட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் காட்டு யானைகள் உலா வருவதால், குழந்தைகள், பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் காட்டு யானைகள் பொதுமக்களை விரட்டுகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
10 கி.மீ. தூரம் அகழி
இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள செளுக்காடி, கோல்கேட் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக கூடலூர் இரும்பு பாலம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை வனத்துறை மூலம் அகழி தோண்டும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அகழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
காட்டு யானைகள் ஊருக்குள் தினமும் வந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அதிகாரிகள், வனத்துறையினர் அகழி தோண்டுவதாக உறுதி அளித்தனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.