நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி
நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி
கோவை
நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்த விற்பனை பிரதிநிதி கைதுசெய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விற்பனை பிரதிநிதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 31). இவர் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள அம்மன் நிதி நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவர் இந்த நிறுவனத்தில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு அவற்றை விற்பனை செய்யும் ஏஜெண்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து மாதந்தோறும் வசூலித்து வந்தார்.இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து விவேகானந்தன் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். அப்போது அவரை தொடர்புகொண்டபோது செல்போன் சுவிட்-ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிதி நிறுவனத்தினர் நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதிநிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
ரூ.10 லட்சம் மோசடி-கைது
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார்.விசாரணையில், கடந்த 15-7-2022 மற்றும் 27-7-2022 ஆகிய தேதிகளில் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அதை இருசக்கர வாகன ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விவேகானந்தன் மீது மோசடி (420), நம்பிக்கை மோசடி (408) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று அவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.