தின்னர் குடித்த 10 மாத குழந்தை சாவு


தின்னர் குடித்த 10 மாத குழந்தை சாவு
x

பெண்ணாடம் அருகே தின்னர் குடித்த 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு தர்ஷித்(4), கிஷ்வந்த் என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர். அறிவழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி உச்சிமேடு கிராமத்தில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பரமேஸ்வரியின் பெற்றோர் ஊரான தாழநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 19-ந்தேதி அவர் தனது குழந்தைகளுடன் சென்றார்.

தின்னர் குடித்தது

நேற்று முன்தினம் மாலையில் குழந்தை கிஷ்வந்த், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் திறந்த நிலையில் ஒரு பாட்டிலில் இருந்த தின்னரை அந்த குழந்தை எடுத்து குடித்து விட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள் குழந்தை கிஷ்வந்தை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை கிஷ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தின்னரை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story