கரூரில் 10 ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை


கரூரில் 10 ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை
x

கரூரில் 10 ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச்சென்றனர்.

கரூர்

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது வரத்து குறைவுதான். வடமாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் தக்காளியின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதன் விளைவாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதற்கட்டமாக 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் நேற்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 500 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு நபருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கரூர் தினசரி மார்க்கெட்டில் அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு தக்காளி வழங்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்து விற்பனை செய்து வருகிறது.

ரூ.60-க்கு விற்பனை

அந்த வகையில் கரூரில் தற்போது 10 ரேஷன் கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. அதன்படி நேற்று ராயனூர் பகுதியில் 2 ரேஷன் கடைகளிலும், வெங்கமேடு பகுதியில் 3 கடைகளிலும், கொளந்தானூரில் 1 கடையிலும், அருணாசல நகரில் 2 கடைகளிலும், புது கச்சேரி வீதியில் ஒரு கடையிலும், அண்ணாமலை சந்து பகுதியில் ஒரு கடையிலும் என கரூரில் 10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் ஒவ்வொரு கடைக்கும் தலா 50 கிலோ அளவில் தக்காளி வழங்கப்பட்டது. இதனால் ஒரு ரேஷன் கார்டுக்கு 1 கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளிகளை வாங்கி சென்றனர். ரூ.60-க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர். கரூரில் தினமும் சுழற்சி முறையில் 10 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story