பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்
கள்ளக்குறிச்சி அருகே விவசாயியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாக்கிய கிராம நிர்வாக அலுவலரின் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40) விவசாயி. இவர் கூட்டுபட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் கிராம நிர்வாக அலுவலர் பெரியாப்பிள்ளையை அணுகினார். அதற்கு அவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அளித்த அறிவுரையின் படி வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு லஞ்ச பணம் கொடுப்பது குறித்து பேசினார்.
அப்போது அவர் கரடி சித்தூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (46) என்பவரை அனுப்புகிறேன். அவரிடம் லஞ்ச பணத்தை கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி வந்த பொன்னுசாமியிடம் ஏற்கனவே திட்டமிட்டபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை வெங்கடேசன் கொடுத்தார்.
கைது
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பொன்னுசாமியை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் லஞ்சப்பணத்தை வாங்க பெரியாப்பிள்ளைதான் பொன்னுசாமியை அனுப்பியது தெரிந்தது. மேலும் பொன்னுசாமி தான் கிராம நிர்வாக அலுவலருக்கு புரோக்கராக செயல்பட்டு லஞ்சப்பணத்தை வாங்கி கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பெரியாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர்.