சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் ஆதாரமாக விளங்கும் 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு


சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் ஆதாரமாக விளங்கும் 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு
x

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பிரதானமாக விளங்கும் பூண்டி. செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 10 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளை ஒப்பிடும் போது நீர் இருப்பு குறைவாகும்.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 10.159 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு விட குறைவாகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10.300 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணா நீர் பங்கீடு ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தக்கோரி ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதன்படி கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த ஆண்டு விட தண்ணீர் இருப்பு குறைவு என்றாலும் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

மேலும் கண்டலேறு அணையிலும் அதிகமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி.தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 2.571 டி.எம்.சி. தண்ணீர் இருப்புள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் 3.072 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதே போல் சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 831 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் தற்போது 3.182 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story