தஞ்சையில் 10 டன் பூக்கள் விற்பனை
வைகாசி விசாகம் மற்றும் வைகாசி கடைசி முகூர்த்த தினம் என்பதால் தஞ்சையில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:-
வைகாசி விசாகம் மற்றும் வைகாசி கடைசி முகூர்த்த தினம் என்பதால் தஞ்சையில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை பூச்சந்தை
தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு இருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அம்மாப்பேட்டை, கோவில்வெண்ணி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனால் பூ மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் முகூர்த்த தினம் மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பூக்கள் விற்பனை செய்யப்படும். இதனால் மக்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்படும்.
பூக்கள் விலை அதிகரிப்பு
நேற்று வைகாசி விசாகம். இதையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்பட்டது. இதே போல் நாளை (திங்கட்கிழமை) முகூர்த்த தினம் ஆகும். வைகாசி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்தம் ஆகும். இதனால் நேற்று பூ மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக விற்பனை செய்யப்படும் பூக்களின் விலையை விட நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக கனகாம்பரம், மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.200 விலை அதிகரித்து காணப்பட்டது. விலை அதிகரித்து காணப்பட்டதாலும் முகூர்த்த தினம் மற்றும், வைகாசி விசாகம் என்பதால் பூக்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
விலை விவரம்
தஞ்சையில் நேற்று விற்பனை செய்த பூக்களின் விலை (கிலோக்கணக்கில்) விவரம் வருமாறு:-
மல்லிகை ரூ.1,000, சம்பங்கி ரூ.300, அரளிப்பூ ரூ.200, ரோஜா ரூ.150, முல்லை ரூ.700, கனகாம்பரம் ரூ.1,000, மருக்கொழுந்து கட்டு ரூ.30, செண்டிப்பூ ரூ.60, ஊட்டி ரோஜா (1 பாக்ஸ்) ரூ.400.
10 டன் விற்பனை
இது குறித்து பூ மொத்த வியாபாரி கூறுகையில், "வைகாசி விசாகம் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும் பூ விற்பனையும் அதிக அளவில் காணப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 டன் அளவுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. வைகாசி மாதத்தில் வரும் கடைசி முகூர்த்த தினம் என்பதால் நேற்று அதிக அளவில் பூ விற்பனை செய்யப்பட்டது. இதே போல் தஞ்சைக்கு பூக்கள் வரத்தும் அதிக அளவில் இருந்தது. இனி பூக்களின் விலை குறையத்தொடங்கும்"என்றார்.