ரூ.2 கோடி மோசடி செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
ரூ.2 கோடி மோசடி செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
நாட்டுக்கோழி பண்ணை நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நாட்டுக்கோழி பண்ணை
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள முத்தூர் சாலையில் ஜி.எஸ்.பவுல்டரி பாம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இங்கு ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் முதலீடு செய்தவர்களின் வீடுகளுக்கே சென்று செட் அமைத்து 400 முதல் 450 நாட்டுக்கோழி குஞ்சுகளையும், அதற்கான தீவனங்களையும் கொடுத்துவிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வீதம் 3 ஆண்டுக்கு கொடுப்பதாகவும், 3 ஆண்டு முடிவில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை நம்பி அங்கு ஏராளமானோர் முதலீடு செய்தனர்.
ரூ.2 கோடி மோசடி
ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட மாதம் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பின்னர் பணம் வழங்கப்படவில்லை. இதை அறிந்த முதலீட்டார்கள் அந்த பண்ணை செயல்பட்டு வந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது அது பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் இது குறித்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் இந்த பண்ணையில் மொத்தம் 89 பேர் முதலீடு செய்து இருப்பதும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.
கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து போலீசார் அந்த பண்ணையை நடத்தி வந்த ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 28),ஜெகநாதன் (வயது 37), மற்றும் பெரியவீரசங்கிலி முருகேஷ், வெள்ளக்கோவில் சசிகலா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.
2 பேருக்கு 10 ஆண்டு சிறை
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்குமார், ஜெகநாதன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 76 லட்சத்து 22 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை செய்து வந்த முருகேஷ், சசிகலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் இந்த தீர்ப்பின்போது கோர்ட்டில் சுரேஷ்குமார், ஜெகநாதன் ஆகியோர் ஆஜராகவில்லை. எனவே அவர்கள் 2 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.