சென்னையில் 100 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்


சென்னையில் 100 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்
x

சென்னையில் 100 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என கடலூரில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடலூர்

மாநில மாநாடு

தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில மாநாடு கடலூரில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் ஜனார்த்தனன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் மாநாடு முடிந்ததும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தேவையான இடங்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படும். மேலும் சென்னை மாநகரில் முதற்கட்டமாக 100 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் விரைவில் வர உள்ளது. சென்னையில் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதும், பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மக்கள் சேவை பாதிப்பு

தமிழகத்தில் 15 ஆண்டுகள் முடிந்த 1,500 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறுத்தினால், மக்களுக்கான சேவை பாதிக்கப்படும். புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். அந்த பஸ்கள் வந்ததும், 15 ஆண்டுகள் முடிந்த பஸ்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். அதுவரை போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கி உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். அதன் பிறகு போக்குவரத்து துறையில் உள்ள பிற காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை மனு

முன்னதாக கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன், கடலூர், பண்ருட்டி தாலுகா பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சதிஷ்குமார், ஆட்டோ மொபைல்ஸ் இயக்குனர் யுவராஜ் ஆகியோர் அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர வட்டார போக்குவரத்து அதிகாரி, நேர்முக உதவியாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். பஸ் கட்டணத்தை உயர்த்துவதுடன், ஆன்லைனில் தற்காலிக அனுமதி சீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அப்போது தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story