திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆனிமாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனிமாத பவுர்ணமி
பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
அவர்கள் சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம்.
பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் மற்ற நாட்களைவிட பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
இந்த மாதத்துக்கான (ஆனி) பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூரில் இருந்து 40 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்கள் என்று மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் இன்று காலை முதல் 2 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.