தோவாளை மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனை


தோவாளை மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனை
x

குமரி, கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. இதையொட்டி தோவாளை மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

குமரி, கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. இதையொட்டி தோவாளை மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஓணம் பண்டிகை

மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவின் அருகில் உள்ள மாவட்டம் என்பதால் குமரியிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த பண்டிகை அஸ்தம் நட்சத்திரத்தையொட்டி நேற்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து வீடுகளில் மாவேலி மன்னரை வரவேற்கும் வகையில் பூக்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.

தோவாளை பூ மார்க்கெட்

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளான மதுரை, ஓசூர், தேவகோட்டை உள்பட பல ஊர்களில் இருந்தும் பூக்கள் வந்து இருந்தன.

இங்கு வரும் பூக்களை குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். பூக்களின் தேவை அதிகமாக இருந்து, பூக்கள் வரத்து குறைவாக இ்ருந்தாலும், பண்டிகை காலங்களிலும் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். ஓணம் பண்டிகை தொடங்கியதாலும், இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது.

பூக்கள் விலை கடும் உயர்வு

இதன்காரணமாக நேற்று முன்தினம் ரூ.700-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 உயர்ந்து நேற்று ரூ.1,200-க்கு விற்கப்பட்டது. இதே போல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது. பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

அரளி ரூ.300, பிச்சி ரூ.750, முல்லை ரூ.700, சம்பங்கி ரூ.400, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.30 கோழிப்பூ ரூ.60, பட்டன் ரோஸ் ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.40, சிவப்புேகந்தி ரூ.50, சிவந்தி (மஞ்சள்) ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.170, கொழுந்து ரூ.90, மருக்கொழுந்து ரூ.120, ஸ்ெடம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.320,் தாமரை ஒரு எண்ணம் 5 ரூபாய், பச்சை ஒரு கட்டு 10 ரூபாய், ரோஸ் பாக்கெட் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது.

100 டன் விற்பனை

தோவாளை மார்க்கெட்டில் நேற்று அதிகாலையில் இருந்தே வியாபாரிகளின் கூட்டம் அலை மோதியது. குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல், கேரள வியாபாரிகளும் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றார்கள்.

தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று ஓணப்பண்டிகை மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இ்ருந்து ஏராளமான பூக்கள் வந்து இருந்தன. சாதாரண நாட்களில் 50 டன் பூக்கள் விற்பனை ஆகும். ஆனால் நேற்று 100 டன் பூக்கள் விற்பனையானது. உள்ளூர் பூக்கள் 40 டன், வெளியூர்களில் இருந்து வந்த பூக்கள் 60 டன் ஆகும்.

வருகிற 8-ந்தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. அன்று மட்டும் மார்க்கெட்டுக்கு 250 டன் பூக்கள் வரவழைக்கப்பட உள்ளன என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story