வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை தொடர வேண்டும்


வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை தொடர வேண்டும்
x

வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மொத்தம் 13 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், தமிழக விவசாய சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட செயலாளர் நீலகண்டன், ஓய்வுபெற்ற சர்க்கரை ஆலை அலுவலர் அருள்நம்பி, மக்கள் நலவாழ்வு மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களின் நிர்வாகிகள் முத்துசாமி, சுதாகர் உள்பட மின் நுகர்வோர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

தெரு விளக்குகள்

அப்போது, பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் நகராட்சி 1-வது வார்டு பகுதியில் உள்ள அம்மன்நகரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மின்கம்பங்கள் இருந்தும் தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. மின்சார பாதையில் வயர் இழுப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் மின்வாரியத்திற்கு தொகை கட்ட வேண்டும் என்று மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த தொகையை உடனடியாக செலுத்தி அம்மன் நகரில் தெரு விளக்குகளை பொருத்த வேண்டும்.

பெரம்பலூர் சுந்தர் நகரில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இங்கு பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 100 யூனிட் இலவச மின்சாரம் மூலம் வாடகைக்கு குடியிருப்பவர்களே அதிகமாக பயனடைந்து வருகின்றனர். தற்போது கூடுதல் இணைப்புகளில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தாமல், தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

விவசாய மின் இணைப்பு

இதைத்தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதிகாரியிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து, மின் இணைப்பு வழங்காத மொத்தம் 558 பேருக்கு விவசாய மின் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். பணிகள் தடைபடுவதை தவிர்க்க மின் இணைப்பிற்குரிய பொருட்களை மின்வாரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். பெரம்பலூர் நகரம், தெற்கு, வடக்கு ஆகிய 3 உதவி மின்பொறியாளர் அலுவலகங்களிலும் மின் கட்டணம் பெறுவதற்கு வசூல் மையத்தில் 3 பேரை பணிக்கு அமர்த்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக மின் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் வரும்போது ஆன்லைனில்தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அதை கைவிடக்கோரியும் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story