அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


நாகையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், நாகை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது பெரும்பாலான இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய கன மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன

மேலும் நாகை செல்லூர், பாலையூர், தெற்கு பனையூர், வடக்கு பனையூர், விடங்களூர், சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியதால் 1,000 ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து கடமடை விவசாய சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் பாலையூர், செல்லூர், தெத்தி, கீழ்வேளூர், வல்லம், வலிவலம், திருக்குவளை, திருமருகல், ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.. இந்தாண்டு குறுவை பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படாததால் பாதிப்பை எப்படி சரிசெய்வது என்று தெரியவில்லை. கஷ்டப்பட்டு கடன் வாங்கிதான் சாகுபடி செய்துள்ளோம்.

நிவாரணம் வழங்க வேண்டும்

அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது வேதனையாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளுக்கு தார்பாய்கள் இலவசமாக வழங்க வேண்டும்.

எந்தவித நெருக்கடியும் இன்றி விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் அறுவடை பணி தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு தேவையான அளவு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

திருமருகல்

திருமருகல், திட்டச்சேரி, அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், பனங்குடி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. .இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.திருமருகல் ஒன்றிய பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தது. இதை தொடர்ந்து வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் வட்டாரத்தில் 11 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் வட்டாரத்தில் பெய்த கன மழையால் பட்டமங்கலம், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, கொளப்பாடு, வலிவலம், கொடியாலத்தூர், ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி 700 ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story