கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பு


கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பு
x

கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக தண்ணீர் வரும்.

47.50 அடி கொண்ட இந்த ஏரியின் மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப வினாடிக்கு 76 கன அடிநீர் அனுப்பப்படுகிறது.

தண்ணீர் நிறுத்தம்

இந்த நிலையில் பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்தது. தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வரை அனுப்பப்பட்டதால் வீராணம் ஏரி 46.15 அடியை எட்டியது. தொடர்ந்து வினாடிக்கு 54 கனஅடிநீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. மேலும் 34 பாசன மதகுகள் மூலம் 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 30-ந்தேதி தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாகவும், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதாலும், பாசனத்திற்கு தண்ணீர் அனுப்புவதாலும், சரியான பருவ மழை பெய்யாத காரணத்தாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.45 அடியாக குறைய தொடங்கியது. இதனால் பாசனத்திற்கு 100 கன அடி தண்ணீரும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 42 கன அடி நீரும் அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், மழை தண்ணீர் கல்லணைக்கு அதிக அளவு வந்தது. அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து கீழ் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக கீழணைக்கு வினாடிக்கு 1000 கன அடி நீர் வந்ததால், கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் நேற்று 8.20 அடியை தொட்டது.

மீண்டும் திறப்பு

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டனர். அந்தத் தண்ணீர் மாலை 2 மணி அளவில் வினாடிக்கு 400 கன அடியாக உருத்திர சோலை மதகு மூலம் வீராணம் ஏரிக்கு வந்தது.

இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது. தொடர்ந்து சென்னைக்கு 42 கன அடி நீரும், பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து அனுப்பப்பட்டால் 3 அல்லது 4 நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story