மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்


மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக வேலூர் கோட்டை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையப்பகுதிகளில் போலீசார் சாதாரண உடைகளில் கண்காணித்து வருகின்றனர். மேலும் வாகன சோதனை, வெடிகுண்டு கண்டறியும் சோதனை உள்ளிட்ட சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழா நடைபெற உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை பார்த்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மோப்பநாயை பயன்படுத்தியும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

1,000 போலீசார் பாதுகாப்பு

மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில்களில் சோதனை

காட்பாடி வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும் செல்கின்றன. காட்பாடியில் இருந்து விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கும், திருப்பதிக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்பாடி வழியாக செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் எடுத்து செல்லும் உடைமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்கின்றனர்.

காட்பாடி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் ஏதாவது மர்ம பொருள் வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனை செய்தனர்.

ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story