பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

சுதந்திர தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி

சுதந்திர தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தின விழா

சுதந்திர தினவிழா இன்று (செவ்வாய்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றுகிறார். பின்னர் அவர் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பின்னர் அனைத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதனையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பயிற்சி நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என 3 துறையினரும் ஈடுபட்டனர்.

போலீஸ் குவிப்பு

வ.உ.சி. மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

ரெயில் நிலையத்தில் சோதனை

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் தண்டவாளங்களில் மோப்பநாய் மூலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ரெயில்களிலும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர், பாபநாசம், அம்பை உள்ளிட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story