1,000 யூனிட் இலவச மின்சாரம்: 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்: அமைச்சர் பேட்டி


1,000 யூனிட் இலவச மின்சாரம்: 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்: அமைச்சர் பேட்டி
x

1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட் டுள்ளதால் 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

முன்னேற்பாடு பணிகள்

கரூர் ராயனூரில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவச மின்சாரம்

தமிழ்நாட்டு விசைத்தறி உரிமையாளர்கள் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தில் சற்று மாற்றம் செய்து குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் 3 நிலைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒரே நிலையாக மாற்றி 70 பைசா மட்டுமே உயர்வு என்ற உத்தரவை கொடுத்து கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 2021 தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு முதல்-அமைச்சர் அரசு நிதியை மின்சார துறைக்கு மானியமாக வழங்கி அதற்கான உத்தரவையும் வழங்கி இன்று (அதாவது நேற்று) அரசாணை வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக இலவச மின்சாரம் வழங்குவதற்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் அதற்கான அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசாணை

இந்த அரசாணை ஒரு மாதத்திற்கு முன்பாகவே வரவேண்டிய அரசாணை ஆகும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்ததால் நேற்று அரசாணை வெளியிடப்பட்டு இருக்கின்றது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் வரை பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு கூடுதலாக 53 கோடியே 68 லட்சம் ரூபாய் ஒரு ஆண்டிற்கு அரசிற்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. அந்த செலவினத்தை அரசு மானியமாக வழங்குவதற்கு முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு உத்தரவை வழங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே 750 யூனிட் வரை பயன்படுத்தக்கூடிய இலவச மின்சாரத்திற்கு ஏறத்தாழ 430 கோடி ரூபாய் அரசு நிதி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 53 கோடியே 68 லட்சம் என ஒட்டுமொத்தமாக ரூ.480.82 கோடி அரசு நிதி விசைத்தறி நெசவாளர்களுக்கு மட்டும் மானியமாக ஒரு ஆண்டிற்கு வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். கைத்தறி நெசவாளர்களை பொறுத்தவரை 42 ஆயிரத்து 780 இணைப்பை நெசவாளர்கள் பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் அரசு நிதி மானியமாக இதுவரை வழங்கப்பட்டது.

1-ந்தேதி முதல் நடைமுறை

தற்போது 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக உயர்த்தப்படுவதால் ஒரு ஆண்டிற்கு ரூ.8 கோடியே 41 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இந்த தொகையையும் அரசு நிதி மானியமாக வழங்குவதற்கு முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு அதற்காக அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கைத்தறியை பொறுத்தவரை ரூ.14 கோடியே 82 லட்சம் ஒரு ஆண்டிற்கு அரசு நிதியை மின்சார துறைக்கு மானியமாக வழங்குவதற்கு முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி கையெழுத்திட்டுள்ளார். ஒட்டுமொத்த நெசவாளர்களை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கக்கூடிய ரூ.437 கோடி கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் ரூ.62 கோடி உயர்த்தப்பட்டு ரூ.499.34 கோடி அளவிற்கு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மட்டும் அரசு நிதி மானியமாக வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு திட்டம் என்பது கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மின்சார வாரியம் அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story