10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்தன
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகா பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய மாவட்டம் முழுவதும் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மங்கைநல்லூர், மணல்மேடு, திருவிழந்தூர், நல்லத்துக்குடி, மணக்குடி, சேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கின.
விடிய, விடிய பெய்த மழை
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து, அறுவடை நேரத்தில் மழை பெய்தது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மழை பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பயிர்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெல்லின் ஈரப்பதத்தை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் விடிய, விடிய பெய்த மழையால் விவசாய பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.