கோவையில் 101 செல்போன்கள் மீட்பு
கோவையில் 101 செல்போன்கள் மீட்பு
கோவை
கோவை மாவட்டத்தில் திருட்டுப்போன 101 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
செல்போன்கள் மீட்பு
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப்போன 101 செல்போன்களை மாவட்ட போலீசார் மீட்டனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்காக மீட்கப்பட்ட செல்போன்கள் அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.அதனை பெற்றுக்கொண்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
800 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் தற்போது வரை பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப்போன 1000 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 70 லட்சம் ஆகும். அதுபோன்று மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன் இதுதொடர்பாக 680 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில்126 குற்ற சம்பவங்களில் ரூ.1 கோடியே 70 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் நடந்த 53 கொலை வழக்குகளில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த 3 மாதத்தில் மட்டும் 44 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள் கண்காணிப்பு
சைபர் கிரைம் குற்ற சம்பவங்களில் ரூ.90 லட்சம் மோசடியாக திருடப்பட்டு இருந்தது. அதில் ரூ.60 லட்சம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள 357 ரவுடிகளில் 300 பேருக்கு பிணைவாரண்டு பத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் 120 கல்லூரி நிர்வாகங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் போதை பொருளுக்கு எதிராக பலகிளப்புகளும் தொடங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் மாவட்ட எல்லையில் கேரளாவில் இருந்து கழிவுகள் கொட்டுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.