நெல்லையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது


நெல்லையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது
x

நெல்லையில் நேற்று 103 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடிய காலம் ஆகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காற்று தீவிரமாக வீசியது. ஆனால் ஓரிரு நாட்கள் லேசாக மட்டுமே மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யாமல் பொய்த்து விட்டது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக குறைவதை கண்ட அதிகாரிகள் விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு அளவை குறைத்து உள்ளனர். குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விட்டது.

இந்த நிலையில் மழை இல்லாமல் போனதுடன், வெயிலின் தாக்கமும் கடுமையாக உள்ளது. சித்திரை மாதம் உச்சி வெயில் கடுமையாக இருப்பது போன்று கடந்த சில நாட்களாக வெயில் அடிக்கிறது. நேற்று நெல்லையில் அதிகப்பட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் மதிய நேரத்தில் அக்னி காற்று வீசியது. சாரல் மழை பெய்து தென்றல் தவழும் நேரத்தில் அக்னி காற்றை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை நம்பி, குறைந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் கருகி வருகின்றன.


Next Story