அதிகாரிகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு
அதிகாரிகளை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். தலைவர் பாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் கோவை மண்டல தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். 108 ஆம்புலன்ஸ் சேவையை பாதுகாக்க தமிழக சுகாதார துறை செயலாளருக்கும், திட்ட இயக்குனருக்கும் கடிதம் எழுதிய காரணத்திற்காக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை கைவிட்டு, மீண்டும் அவருக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தில் ரேடியேட்டர் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கும் நோக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட மாநில பொருளாளர் சாமிவேல் மற்றும் செந்தில்குமார், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக விருதுநகர் மாவட்ட செயலாளர் சுகதேவ், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆனந்த் ஆகியோரின் பணி நீக்கத்தை கைவிட்டு, அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டும் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அதிகாரிகளை கண்டித்து சங்கத்தின் சார்பில் பெரம்பலூரில் வருகிற 22-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட உறுப்பினர் தேவபாலன் தலைமையில் சங்கத்தினர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.