முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிமாதம் 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி முத்து மாரியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள நல்லதண்ணி குளத்தில் இருந்து மேளதாளம் இசைக்க மஞ்சள் ஆடை அணிந்த பெண்கள் 108 பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று முத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து முத்துமாரியம்மனுக்கும், ஏரியில் உள்ள கிராம தேவதையான துர்க்கையம்மனுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கும், துர்க்கை அம்மனுக்கும் தேன், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து, வஸ்திரங்கள் உடுத்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்கிரவாண்டி கிராமமக்கள், குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை 4-வது வெள்ளி உற்சவதாரர்கள் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முன்னின்று செய்தனர்.