சக்தி மாரியம்மன் கோவிலுக்கு 108 பால்குட ஊர்வலம்
ரெட்டணை சக்தி மாரியம்மன் கோவிலுக்கு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
மயிலம்,
மயிலம் அருகே ரெட்டணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள் ரெட்டணை ராஜ ராஜேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்துவந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான எற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.