ரூ.108 கோடியில் காவிரி குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி
ரெட்டியார்சத்திரம் பகுதியில் ரூ.108 கோடியில் காவிரி குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி நடைபெற இருப்பதாக அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
கிடங்கு கட்டுமான பணி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சுள்ளெறும்பு கிராமத்தில் உணவு பொருள் கிடங்கு கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பூமி பூஜை, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ரூ.4 ஆயிரம் கோடியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி நடக்கிறது. புதிய கிடங்கு கட்டப்படுவதால் திண்டுக்கல் மேற்கு தாலுகா மற்றும் குஜிலியம்பாறையை சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு குடிமை பொருள் விரைவாக வழங்க முடியும்.
ரூ.108 கோடி
மேலும் பன்றிமலையில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். சுள்ளெறும்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1½ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ரெட்டியார்சத்திரம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதற்கு ரூ.108 கோடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது, என்றார்.
இந்த விழாவில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மெர்லின்டாரதி, ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, தாசில்தார் ரமேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைசாமி, வேதா, தி.மு.க. மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தொண்டர் அணி அமைப்பாளர் விவேகானந்தன், மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி தலைவர் சின்னு என்ற முருகன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ராஜேஷ்பெருமாள், மணி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.