கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல்


கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல்
x

கோவையில் கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை,

கோவை கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

109 பொருட்கள் பறிமுதல்

இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story