துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 10-ம் வகுப்பு மாணவி கொலை -காதலன் வெறிச்செயல்
10-ம் வகுப்பு மாணவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. கட்டிட மேஸ்திரி. இவரது ஒரே மகள் ரேணுகா (வயது 14). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ரேணுகா கடந்த 23-ந் தேதி அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சொல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாரி வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேணுகா கடைசியாக அதே ஊரைச் சேர்ந்த பாரதி நகர் நீலமேகம் என்பவரின் மகன் யோகேஸ்வரனிடம் (21) செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து யோகேஸ்வரனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
கழுத்தை இறுக்கி கொலை
பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தான் மாணவி ரேணுகாவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
யோகேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், ரேணுகாவும் 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சென்னாவரம் கிராமத்தில் இருவரும் தனிமையில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த யோகேஸ்வரன் ரேணுகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவினால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ரேணுகாவின் பிணத்தை அங்குள்ள முட்புதரிலேயே வீசிவிட்டு தப்பிஓடியது தெரிய வந்தது.
காதலன் கைது
பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்று முட்புதரில் இருந்த ரேணுகா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் யோகேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.