குடிநீர் உறிஞ்சிய 11 மின் மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்சிய 11 மின் மோட்டார்கள் பறிமுதல்
x

நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 11 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் லெனின் தலைமையிலான குழுவினர் நெல்லை 21, 22-வது வார்டு பகுதியில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 11 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் சீராக குடிநீர் பெற முடியவில்லை. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார்.


Next Story