தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த குட்டியானையை தேடிவந்த 11 யானைகள்
கோவை அருகே பாலமலை அடிவாரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த குட்டியானையை தேடி 11 யானைகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை அருகே பாலமலை அடிவாரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த குட்டியானையை தேடி 11 யானைகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குட்டியானை சாவு
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை அடிவாரத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் ஓரத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது, இந்த தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். இதற்காக எப்போதும் அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து கூட்டத்துடன் வெளியேறிய குட்டியானை அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க முயன்றுள்ளது. அப்போது அந்த குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது.
தவறி விழுந்து உயிரிழப்பு
இதற்கிடையில் தண்ணீர் தொட்டியில் குட்டியானை இறந்து கிடப்பதை அறிந்த வீட்டின் காவலாளி, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த குட்டியானைக்கு சுமார் 2 வயது இருக்கும் என்றும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்தபோது, குட்டியானை தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வந்தனர். நேற்று முன்தினம் மாலை நீண்ட நேரம் ஆகியதால் தண்ணீர் தொட்டியில் இருந்து குட்டியானையின் உடலை மீட்க முடியவில்லை.
11 காட்டு யானைகள் முகாம்
இதற்கிடையே நேற்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, பாலமலை அடிவாரத்தில் உள்ள பண்ணை வீடு இருக்கும் பகுதியில் முகாமிட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்ததை அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகள் பண்ணை வீட்டுக்குள் நுழையாதவாறு தடுத்து பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், இறந்த குட்டி யானையை தேடித்தான் 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் பண்ணை வீட்டில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன. கூட்டமாக தண்ணீர் குடிக்க வந்தபோதுதான் தண்ணீர் தொட்டியில் குட்டியானை விழுந்து உயிரிழந்துள்ளது என்று தெரிவித்தனர்.
உடற்கூறு ஆய்வு
அதனைத்தொடர்ந்து குட்டியானையின் உடலை மீட்கும் பணி நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் உதவியுடன் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியை உடைத்து குட்டியானையின் உடலை வெளியே எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் குட்டியானையை வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
இதுகுறித்து கோவை மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரணியன் கூறுகையில், குட்டியானை விழுந்து இறந்த தண்ணீர் தொட்டியை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தண்ணீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, அதன் அருகே உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.