1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோயம்புத்தூர்

காரமடை

காரமடையில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புகையிலை பொருட்கள்

காரமடை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், மேட்டுப்பளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் இப்ராகிம், தியாகராஜூ மற்றும் போலீசார் காரமடை-மேட்டுப்பாளையம் சாலை குட்டையூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது, காரில் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1,100 கிலோ பறிமுதல்

தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த வியாபாரி காஜா மைதீன் (49) என்பதும், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.

இதில் காஜா மைதீன் கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து, காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து புகையிலையை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வியாபாரி கைது

அதனைத்தொடர்ந்து காஜா மைதீனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைதான காஜா மைதீனை போலீசார் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர். மேலும் காஜா மைதீனுக்கு உடந்தையாக இருந்து அவருடைய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காரமடை போலீசாருக்கு மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.



Next Story