கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் 12 பேர் படுகாயம்


கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் 12 பேர் படுகாயம்
x

ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியது. சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர். கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் அங்கு இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் ஏற்பட்டவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் இந்த சிலிண்டர் குடோன் அனுமதியுடன் நடத்தப்படுகிறதா? இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் காஞ்சீபுரம் எம்.பி. செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Next Story