டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பறித்த வழக்கு: கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது


டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பறித்த வழக்கு: கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது
x

டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்த வழக்கில் கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

கருக்கலைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவர் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தை கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீசார் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைகளை செய்தபோது அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் தனது மகளுக்கு சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் கருக்கலைப்பு செய்ததாக இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தார்.

மிரட்டி ரூ.12 லட்சம் பறிப்பு

இதன் அடிப்படையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வரும் அரசு டாக்டர் பராசக்தி மற்றும் மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி விசாரணை நடத்தினார். பின்னர் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி அரசு டாக்டர் பராசக்தியிடம் ரூ.10 லட்சம், தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் இருந்து ரூ.2 லட்சம் என்று மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கினார். மிரட்டி பணம் வாங்கியது குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம்

விசாரணையில் பணம் வாங்கியது உறுதியானதால் கடந்த 11-ந்தேதி வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அரசு டாக்டர் பராசக்தி, மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் செய்தார்.

கைது

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி மற்றும் வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மறைமலைநகர் தனிப்படை போலீசார் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மகிதா அன்ன கிருஷ்டியை கைது செய்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.


Next Story