வாடிக்கையாளர்களுக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
பயண ஏற்பாடு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு வழங்க அரியலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரத்து
சென்னையை சேர்ந்த விஜயசாரதி(வயது 67), வரதராஜுலு(66), விஸ்வாசகுமார்(63), சுப்பிரமணி(67), அகசம்(62), சேலத்தை சேர்ந்த இளங்கோவன்(63), மணிவண்ணன்(61), விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி(64), புதுச்சேரியை சேர்ந்த மேகர்அலி என்கிற ராஜா(65) உள்பட அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 27 பேர் 06-03-2015 அன்று சென்னையிலிருந்து இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரான போர்ட் பிளேயர் செல்லவும், 10-03-2015 அன்று போர்ட் பிளேயரிலிருந்து சென்னை திரும்புவதற்கும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் செல்வதற்கான பயணச் சீட்டுகளை மேக் மை ட்ரிப் நிறுவனம் மூலமாக கடந்த 29-11-2014 அன்று முன்பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் கடந்த 06-03-2015 அன்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்திற்கு சென்று ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் செல்வதற்கான சீட்டை பெறுவதற்கு அலுவலக பணியாளர்களிடம் கேட்டபோது, தங்கள் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கள் அனைத்தும் மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் ரத்து செய்யப்பட்டது என்றும், அவர்களை தொடர்பு கொண்டுதான் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகத்தில் கூறியுள்ளனர்.
கூடுதல் கட்டணம்
இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்வதற்கும், அங்கிருந்து சென்னை திரும்புவதற்கான விமான பயணச் சீட்டுகளை கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்று தங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பயணிகள் தங்களால் கூடுதலாக செலுத்தப்பட்ட பயண கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு மேக் மை ட்ரிப் மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் கேட்டதில் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களால் பயண கட்டணத்துக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை ரூ.1,86,000 கேட்டும், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மற்றும் மேக் மை ட்ரிப் நிறுவனம் ஆகியவற்றின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டும், கடந்த 2017-ம் ஆண்டு சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று தீர்ப்பளித்தனர். இதில் சேவை குறைபாட்டின் காரணமாக விமான சீட்டுகளைப் பெறுவதற்கு கூடுதலாக செலவிடப்பட்ட தொகை ரூ.1,86,000 மற்றும் சேவை குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.10,75,000-ஐ மேக் மை ட்ரிப் நிறுவனம் 4 வாரத்திற்குள் 9 பேருக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை விடுவித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.