12 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.250 அபராதம்
பொள்ளாச்சியில், சாலையில் சுற்றித்திரிந்த 12 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.250 நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில், சாலையில் சுற்றித்திரிந்த 12 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.250 நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
சாலையில் மாடுகள்
பொள்ளாச்சியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த ஆடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அபராதம்
இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முருனாந்தம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் நகரில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை
சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்துக்களும் ஏற்படுவதாக புகார் வந்தது. பொள்ளாச்சி பல்லடம் ரோடு, மகாலிங்கபுரம், சரோஜினி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலைகளில் சுற்றித்திரிந்த 12 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து சாலைகளில் மாடுகளை விட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். இதையடுத்து மாடுகளை நகராட்சி மூலம் பிடித்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.