தனுஷ்கோடி கடலின் நடுவே மணல் திட்டில் குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதவிப்பு


தனுஷ்கோடி கடலின் நடுவே மணல் திட்டில் குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் தவித்த குழந்தைகள் உள்பட இலங்கை அகதிகள் 12 பேர், கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் தவித்த குழந்தைகள் உள்பட இலங்கை அகதிகள் 12 பேர், கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.

அகதிகளாக வருகை

கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீள முடியாமல் இலங்கை நாடு தவித்து வருகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதால் அங்கு மக்களும் சில மாதங்களாக கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதன்காரணமாக அங்கு வாழ முடியாமல் அகதிகளாக தமிழகத்தை நோக்கி அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு, இலங்கையில் இருந்து படகுகளில் தப்பி வருகிறவர்கள் ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதியில்தான் கரை சேர்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்திற்கு 158 பேர் அகதிகளாக வந்துள்ள நிலையில், குழந்தைகள் உள்பட மேலும் 12 பேர் தனுஷ்கோடி வந்தனர்.

மணல் திட்டில் தவிப்பு

அதாவது, தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இந்திய எல்லை பகுதியில்் உள்ள 4-வது மணல் திட்டு பகுதி வரை படகில் வந்து, அவர்கள் இறக்கி விடப்பட்டு்ள்ளனர். இதுபற்றிய தகவல் மீனவர்கள் மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் விரைந்து சென்று நடுக்கடலில் 4-வது மணல் திட்டில் தவித்த 12 பேரையும் மீட்டனர். அதில் 6 பேர் குழந்தைகள் ஆவர்.

தீவிர விசாரணை

12 பேரையும் கப்பலில் ஏற்றி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான கடலோர போலீசார், 12 பேரையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கலைகுமார் (வயது 33), இவருடைய மனைவி ஆனந்தினி (30), குழந்தைகள் சுலக்சன் (12), சுலக்சனா (11), தில்லையம்மாள் (68, இதேபோல் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சசிகரன் (35), இவருடைய மனைவி கலைச்செல்வி (30), குழந்தைகள் பிரணவன் (6), ஜினிசிட்கா (10), ஹம்சிகா (9), சஸ்மிகா (5), மேலும் யாழ்ப்பாணம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கயிலாய பிள்ளை (54) ஆகியோர் வந்துள்ளனர்.

பேட்டி

இலங்கையில் தற்போதைய நிலை பற்றி கலைச்செல்வி கூறியதாவது.-

இலங்கையில் விலைவாசி இன்னும் குறையவில்லை. இலங்கை நாட்டு மதி்ப்பில் அரிசி ஒரு கிலோ ரூ.250, குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒரு டப்பா ரூ.1250. இப்படித்தான் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உள்ளது. அங்கு வேலைவாய்ப்பும் இல்லை. அதனால் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் படகுக்கு 30 ஆயிரம் பணம் கொடுத்து இங்கு தப்பி வந்துவிட்டோம். இதற்காக தங்க கம்மல், நகைகளை அடமானம் வைத்து அந்த பணத்தைதான் படகோட்டிக்கு கொடுத்தோம்.

இவ்வாறு அவர் வருத்தத்துடன் கூறினார்.

அகதியாக வந்த அனைவரின் உடைமைகள் மற்றும் அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கடலோர மற்றும் க்யூ பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். போலீசாரின் விசாரணைக்கு பின்னர் 12 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது.


Next Story