12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை


12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
x

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000/- மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வோ, பணி நிரந்தரமோ இதுவரை ஏதும் செய்யப்படவில்லை.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத நிலையே நீடிக்கிறது. இதனால் இவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகின்றன. எனவே, தமிழக அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொங்கல் போனஸ் உடன் வழங்கிடவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story