12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது


12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:45 PM GMT)

நாகை மாவட்டத்தில், இதுவரையில் 12 ஆயிரம் டன் நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நாகை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில், இதுவரையில் 12 ஆயிரம் டன் நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நாகை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

குறுவை நெல் சாகுபடி

நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர் வறட்சியால் பாதிக்கப்பட்டது. எஞ்சிய பயிர்களை பம்பு செட்டுகள் மூலமாகவும், நீர்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை எஞ்சின் மூலமாகவும் இறைத்து வயலுக்கு பாய்ச்சி தற்போது குறுவை நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக பெருங்கடம்பனூர், தெத்தி, சின்னத்தும்பூர், ஆவராணி, பட்டமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

ஆய்வு

இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நாகை முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? நெல்லின் தரம், நெல்மூட்டைகளின் எடை, சாக்கு, சணல், தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

109 நேரடி கொள்முதல் நிலையங்கள்

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நாகை மாவட்டத்தில் 109 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 68 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரம் டன் நெல்

அந்த வகையில் இதுவரை பொது ரகம் 4 ஆயிரம் டன்னும், சன்ன ரகம் 8 ஆயிரத்து 600 டன்னும் என மொத்தம் 12 ஆயிரத்து 600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் தற்காலிக மற்றும் நடமாடும் கொள்முதல் நிலையத்தை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வின்போது தரக்கட்டுபாட்டு துணை மேலாளர் தியாகராஜன், உதவியாளர் சுப்புரத்தினம் உள்பட நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story