காரையாறு பகுதியில் ஒரே நாளில் 12 டன் குப்பைகள் அகற்றம்
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு பகுதியில் ஒரே நாளில் 12 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு பகுதியில் ஒரே நாளில் 12 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஆடி அமாவாசை
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 16-ந் தேதி நடந்தது. இதைமுன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர். தாமிரபரணி ஆற்றின் கரையில் வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மரங்கள் வளர்ப்பதன் நன்மை குறித்தும் இங்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டு, துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பைகள் அகற்றம்
மேலும், இந்த திருவிழாவின் போது பொதுமக்கள் விட்டுச்சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியிலிருந்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் கார்த்திகேயன் ெதாடங்கி வைத்தார்.
இந்த பணியில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி, அம்பை கலைக்கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி, ராணி அண்ணா கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 175 தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள், மணிமுத்தாறு 9-வது சிறப்பு காவல்படையை சேர்ந்த 85 போலீஸ்காரர்கள், அம்பை, பாப்பாக்குடி, சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 75 தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த 60 தூய்மை பணியாளர்கள், விக்கிரமசிங்கபுரம், அம்பை நகராட்சி பகுதிகளை சேர்ந்த 55 தூய்மை பணியாளர்கள், திருக்குறுங்குடி மற்றும் களக்காடு வனக்குழுவைச் சேர்ந்த 55 வனக்குழுவினர், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள் 35 பேர், இந்து அறநிலையத்துறையை சேர்ந்த 100 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 640 பேர் ஈடுபட்டனர்.
12 டன் குப்பைகள்
இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், நேற்று நடைபெற்ற தூய்மை பணியில் 12 டன் குப்பைகள் வனப்பகுதி மற்றும் கோவில் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்றார்.
இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, 9-வது சிறப்பு காவல்படை கமாண்டன்ட் கார்த்திகேயன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், அம்பை தாசில்தார் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.