கஞ்சா பதுக்கிய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை


கஞ்சா பதுக்கிய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 Sept 2023 2:30 AM IST (Updated: 26 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா பதுக்கிய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டியில் ஒரு முட்புதரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கம்பம் வடக்கு போலீசாருக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் ஒரு மூட்டையை புதருக்குள் வீசிவிட்டு தப்பி ஓடினர். அந்த மூட்டையை சோதனையிட்ட போது அதற்குள் 22 கிலோ கஞ்சா இருந்தது. தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்தபோது, அவர்கள் கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த மனோகரன் (37), தெய்வம் (55) என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வந்தனர்.

இதற்கிடையே மனோகரன், தெய்வம் ஆகிய 2 பேரும் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டு தலைமறைவாகி விட்டனர். அதில் மனோகரனை கடந்த ஜனவரி மாதமும், தெய்வத்தை கடந்த மாதமும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், மனோகரன், தெய்வம் ஆகிய 2 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story