ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 120 பேர் கைது


ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 120 பேர் கைது
x

ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை கண்டித்து புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுழைவுவாயில் முன்பே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் வகையில் இரும்பு தடுப்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன. மேலும் ரெயில் நிலையத்தின் வளாகத்திலும், உள்ளேயும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட தலைவர்கள் முருகேசன் (வடக்கு), முன்னாள் எம்.எல்.ஏ. ராம சுப்புராம் (தெற்கு) ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை திரண்டனர். ரெயில் நிலையத்தின் உள்ளே செல்ல விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் இரும்பு தடுப்பு கம்பிகளை தாண்டி சென்றனர். இருப்பினும் ரெயில் நிலையத்தின் உள்ளே செல்லவிடாமல் வளாகப்பகுதியில் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து 120 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story