124-வது மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 124 -வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஊட்டி,
இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர்.
தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மலர் மாடங்களை பார்வையிடுகிறார்.
மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூஞ்செடிகளும் அடங்கும்.
விழாவின் முக்கிய அம்சமாக ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வேளாண் பல்கலைக்கழக கட்டிடம் முகப்பு தோற்றம் அமைக்கப்படுகிறது. மேலும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 6 பழங்குடியின மக்களின் உருவங்கள் கொய் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
இதேபோல் ஊட்டி உருவாகி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி 'ஊட்டி 200' என்று மலர்களால் எழுதப்பட்டு உள்ளது. இதுதவிர சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் மலர் செடிகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.






