4 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடந்து வரும் 12-வது பட்டாலியன் அலுவலக கட்டிட பணி


4 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடந்து வரும் 12-வது பட்டாலியன் அலுவலக கட்டிட பணி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.34 கோடி மதிப்பில் 12-வது பட்டாலியன் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிகள் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.34 கோடி மதிப்பில் 12-வது பட்டாலியன் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிகள் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

12-வது பட்டாலியன்

தமிழகத்தில் மணிமுத்தாறு, சென்னை, கோவை, பழனி, ராஜபாளையம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை எனும் பட்டாலியன் செயல்பட்டு வருகிறது. இதில் 12-வது பட்டாலியன் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இடவசதி இல்லை என்பதால் மணிமுத்தாறில் உள்ள 9-வது பட்டாலியனுடன் இணைந்து தற்போதுவரை செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பட்டாலியன் படைவீரர்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 12-வது ராமநாதபுரம் பட்டாலியன் அமைப்பிற்கு நிரந்தர கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியது.

இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் 79 ஏக்கர் பரப்பளவில் இந்த பட்டாலியன் அலுவலக கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த பட்டாலியனில் காவலர் குடியிருப்பு, அலுவலகம், ஆயுத வைப்பறை, காவாத்து மைதானம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட இந்த பணிகள் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

பணிகள்

வெளிப்புற கட்டிட பணிகள் அனைத்தும் முடிந்து பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் இன்னும் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் உள்ளது. முதல்வர் ராமநாதபுரம் வரும்போது இந்த கட்டிடத்தை திறந்துவைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும், பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும்தான் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் குருபூஜை, தேவர் குருபூஜை சமயத்திற்கு முன்னதாக பணிகளை முடித்து பட்டாலியன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் மூலமே ராமநாதபுரத்தில் விரைவில் 12-வது பட்டாலியன் செயல்பட முடியும் என்பதோடு, கமாண்டன்ட் தலைமையில் சுமார் 80-க்கும் மேற்பட்டவீரர்கள் மணிமுத்தாறில் இருந்து இங்கு மாற்றி நியமிக்கப்பட்டு கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஒழுங்கு பணியில் மற்ற மாவட்டத்தினரை நம்பி இருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.


Next Story