636 பயனாளிகளுக்கு ரூ.13½ கோடியில் கடனுதவி


636 பயனாளிகளுக்கு ரூ.13½ கோடியில் கடனுதவி
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:45 PM GMT)

நாகையில் கூட்டுறவுத்துறை மூலம் 636 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

நாகப்பட்டினம்


நாகையில் கூட்டுறவுத்துறை மூலம் 636 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

கடனுதவி

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.13 கோடியே 64 லட்சம் கடன் உதவிகள்

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:- கூட்டுறவுத்துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் 100 கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகளிர் சுய உதவி குழுக்கள், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு, வட்டியில்லா மீனவர் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டி இல்லா கடன் ஆகியவை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், நகை கடன், சுய உதவி குழு கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், பணியாளர் கூட்டுறவு சிக்கன கடன், மத்திய கூட்டுறவு வங்கி கிளை கடன்கள் என மொத்தம் 636 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வாகனங்கள்

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை சங்கங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் கீழ்வேளுர், வேளாங்கண்ணி, கூத்தூர், கொளப்பாடு, ஆயக்காரன்புலம், மருதூர் வடக்கு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான வேளாண் போக்குவரத்து வாகனங்கள் வழங்கப்பட்டது.

பெறப்பட்ட கடன்களை உரிய கால தவணை செலுத்தி நன்மதிப்பை பெற்று மீண்டும் அதிகப்படியான கடன் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அருளரசு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் ஜெகத்ரட்சகன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், மகளிர் சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story