கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம்; அர்ஜுன் சம்பத் பேட்டி


கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம்; அர்ஜுன் சம்பத் பேட்டி
x

கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

திருச்சி

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சமயபுரம் உள்ளூர் மக்களுக்கு கட்டணமின்றி அம்மனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறையை நிறுத்திவிட்டனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதும், சுங்கக் கட்டணம் வசூலிப்பதும் தவறான அணுகுமுறையாக உள்ளது. இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

கோவில்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். திருச்சி வாழைக்காய் மண்டி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது. திருச்சி கோர்ட்டு வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோவில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து பூஜைகள் நடத்தவும், பக்தர்கள் வழிபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து வருகிற 13-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு வந்து சேரும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவாக செயல்படும். இஸ்ரேலில் நடைபெறும் போர் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றன. எனவே, மத்திய உளவுத்துறை இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவோரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story