சென்னை விமான நிலையத்தில் மழையால் 13 விமான சேவைகள் தாமதம் - பெங்களூரூ விமானம் திருப்பி விடப்பட்டது


சென்னை விமான நிலையத்தில் மழையால் 13 விமான சேவைகள் தாமதம் - பெங்களூரூ விமானம் திருப்பி விடப்பட்டது
x

சென்னை விமான நிலையத்தில் மழையால் 13 விமான சேவைகள் தாமதம் ஆனது. பெங்களூரூ விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கே திருப்பி விடப்பட்டது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இருந்து திடீரென கரும் மேகங்கள் சூழ்ந்து கொண்டு, இடியுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மாலை 4.20 மணிக்கு பெங்களூருவில் இருந்து 74 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கே திருப்பி விடப்பட்டது. வானிலை சீரானதும் சென்னை வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்க வந்த மேலும் சில விமானங்கள் தர இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்தன. திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 6 விமானங்கள் தரையிறங்காமல் காத்திருந்தன. மழை நின்றதும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், கவுகாத்தி, கொல்கத்தா, கோவை, டெல்லி, மதுரை, இலங்கை ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய 7 விமானங்கள் மழை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை புறநகர் பகுதியான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில், கோயில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நந்தவன மேட்டூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆவடி-பூந்தமல்லி சாலை, சி.டி.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியது.


Next Story